இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுக்காக (VRS) விண்ணப்பித்துள்ள 2,200 ஊழியர்கள் தங்களது எதிர்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அரசாங்கம் வழங்கிய கால அவகாசத்திற்குள் விருப்ப ஓய்வு பெறத் தீர்மானித்து, அதற்கமையத் தங்களது எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்களை வகுத்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுசீரமைப்புச் செயல்முறை தொடர்ந்து தாமதமடைந்து வருவதால், திட்டமிட்டபடி சபையிலிருந்து விலகித் தங்களது புதிய வாழ்வாதார முயற்சிகளைச் செயல்படுத்த முடியாமல் உள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த இழுபறி நிலையால் 2,200 ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கும் பொருளாதாரக் குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளதாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சக்தி மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் புபுது நிரோஷன் ஹெடிகல்லகே அண்மையில் பதவி விலகியிருந்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தில், “சபையைக் கலைப்பதற்கான உத்தியோகபூர்வ திகதியை அறிவிப்பதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன” எனக் குறிப்பிட்டிருந்ததை ஊழியர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
இலங்கை மின்சார சபை கலைக்கப்படும் மற்றும் புதிய கட்டமைப்பு உருவாகும் உத்தியோகபூர்வ திகதியை உடனடியாக அறிவிப்பதன் மூலமே, தங்களால் கௌரவமான முறையில் ஓய்வுபெற்று அடுத்தகட்ட வாழ்க்கையைத் தொடங்க முடியும் என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.