கரூர் கூட்ட நெரிசலில் பலர் சிக்கி உயிரிழந்தமைக்கு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என கடிதம் எழுதிவிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய 41 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விற்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக கிளைச் செயலாளர் அய்யப்பன் திடீரென தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
அவர் தவறான முடிவெடுக்க முன்னர் கரூர் சம்பவம் தொடர்பில் எழுதிய கடிதமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தில், ‘கரூர் பிரசாரத்தின் போது போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை, நூதன முறையில் நெருக்கடி கொடுத்து பலரது உயிரையும் காவு வாங்கிய செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வேண்டும்’ என எழுதப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட மன வேதனையே அவரை தவறான முடிவெடுக்க தூண்டியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.