வீட்டைவிட்டு வெளியேறாதீர் – வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை

ketheeshwaran

வீட்டைவிட்டு வெளியேறாதீர் – வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை

நாட்டின் வடக்கு மாகாணத்தில் அண்மைய வாரங்களாக கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்தநிலை மிகவும் ஆபத்தான நிலையாகும். இதனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசிய தேவை தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். – இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வடக்கு உட்பட நாடளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்பும் அதிகரித்துவரும் நிலையில், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி எச்சரிக்கை விடுத்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தை பொறுத்தவரை இறப்புகள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. அதிலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சில வாரங்களாக நோய் அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள். இது ஓர் ஆபத்தான விடயம். எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். சுகாதார அமைச்சு, சுகாதாரத் திணைக்களம் என்பவை ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன. வடக்கு மாகாணத்திலும் இந்தத்தொற்று இன்னும் சில நாள்களில் மோசமான நிலைமையை உருவாக்கும். அந்தளவுக்கு அபாயகரமான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். மேல் மாகாணத்தில் தற்போது இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. அதே நிலைமை வடக்கு மாகாணத்திலும் இனி வருங்காலத்தில் ஏற்படலாம். எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுதல் மிகவும் அவசியமாகும்.

இன்றைய (நேற்றைய) நிலைவரத்தின்படி, வடக்கில் இந்த மாதம் இதுவரை ஆயிரத்து 115 பேர் புதிய கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம் 544, மன்னார் 141, வவுனியா 215, முல்லைத்தீவு 54, கிளிநொச்சி 161 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 5 லட்சத்து 9 ஆயிரத்து 324 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக முதல் டோஸ் தடுப்பூசி வழங்கும் பணிகள் கடந்த சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக நடைபெற்றன. இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 563 பேரும் கிளிநொச்சியில் 57 ஆயிரத்து 152 பேரும் முல்லைத்தீவில் 50 ஆயிரத்து 577பேரும் மன்னாரில் 54 ஆயிரத்து 242 பேரும், வவுனியாவில் 80 ஆயிரத்து 770 பேரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர். வடக்கில் 30 வயதுக்கு மேற்பட்ட 77 வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றது.

எதிர்காலத்தில் மருத்துவமனைகள் உட்பட பொது இடங்களுக்குச் செல்லும்போதும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போதும் தடுப்பூசி அட்டையைக் கொண்டுசெல்வது கட்டாயமாக்கப்படும். உலக நாடுகளில் இந்த நடைமுறை காணப்படுகின்றது. எமது நாட்டிலும் இதை நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசியை காலந்தாழ்த்தாது பெற்றுக்கொள்ளுங்கள். அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்பவர்கள் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், வேறு நோயுள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். வித்தியாசமான நோயறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச்சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும். – என்றார்.
…..

Exit mobile version