2 நாட்களில் பயணம்: நிலவில் சுயசார்பு நகரம் அமைக்க ஈலோன் மஸ்க் அதிரடி திட்டம்!

02

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தலைவர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு முன்னதாக நிலவில் மனிதக் குடியிருப்புகளை உருவாக்கும் தனது புதிய இலக்கை அறிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் “சுயமாக இயங்கும் நகரம்” ஒன்றை அமைப்பது சாத்தியம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதை விட நிலவிற்குச் செல்வது மிகவும் இலகுவானது மற்றும் விரைவானது எனச் சுட்டிக்காட்டிய மஸ்க், செவ்வாய்க்குச் செல்ல 6 மாதங்கள் தேவைப்படும் நிலையில், நிலவை வெறும் 2 நாட்களில் சென்றடைய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி, நிலவில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி ஆக்சிஜன், நீர் மற்றும் கட்டுமானப் பொருட்களை அங்கேயே தயாரிப்பதே மஸ்க்கின் பிரதான இலக்காகும். செவ்வாய் கிரகத்திற்கு 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே விண்கலங்களை அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், நிலவிற்கு ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை விண்கலங்களை அனுப்ப முடியும் என்பது இந்தத் திட்டத்தின் கூடுதல் சிறப்பாகும். நிலவின் மண்ணைப் பயன்படுத்தி வளங்களைத் தயாரிப்பது பூமியில் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை ஒத்ததுதான் என நிபுணர்கள் கூறினாலும், நிலவின் கடுமையான வெப்பநிலை மற்றும் தூசு நிறைந்த சூழல் பெரும் சவாலாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2027 மார்ச் மாதத்தில் நிலவில் ஆளில்லா விண்கலத்தைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளதுடன், நாசாவின் ‘ஆர்டெமிஸ்’ திட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்துடன், விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தரவு மையங்களை அமைக்கும் லட்சியத்தையும் மஸ்க் கொண்டுள்ளார். மனித நாகரிகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே தனது முதன்மையான முன்னுரிமை எனத் தெரிவித்துள்ள அவர், செவ்வாய் கிரகத்தை அடைவதற்கான ஒரு முக்கிய “படிக்கல்லாக” நிலவு அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Exit mobile version