கனடாவில் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது: கடும் குளிரில் அமெரிக்க எல்லையை கடந்த ஹெய்ட்டி நாட்டவர்கள்!

images 21 1

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 19 பேரை கனடிய அரச குதிரைப்படை பொலிஸார் (RCMP) கியுபெக் மாகாணத்தில் கைது செய்துள்ளனர்.

கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி (Montérégie) பிராந்தியத்தில் உள்ள ஹேவ்லாக் (Havelock) பகுதிக்கு அருகில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட 19 பேரும் ஹெய்ட்டி (Haiti) நாட்டைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அடங்குவர்.

இப்பகுதியில் வெப்பநிலை மைனஸ் 15 பாகைக்கும் குறைவாக இருந்த நிலையில், இவர்கள் காடுகளுக்குள் மறைந்திருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டனர்.

கடும் குளிரின் காரணமாக இவர்களில் 8 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் அறுவருக்குக் கடுமையான உறைபனித் தாக்கம் (Frostbite) ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது கனடாவிடம் ஏதிலி (Refugee) அந்தஸ்து கோரியுள்ளனர்.

இவர்களை ஏற்றிச் செல்ல வாகனத்துடன் வந்த ஒரு நபரும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நிலவும் குடியேற்றக் கொள்கை மாற்றங்கள் மற்றும் ஹெய்ட்டியில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, அங்கிருந்து வெளியேறி கனடாவிற்குள் தஞ்சமடைய முயல்வோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version