வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த நான்கு நண்பர்கள் இணைந்து நேற்று (18) மாலை மயிலங்குளம் குளத்திற்கு நீராடச் சென்றுள்ளனர்.
நண்பர்கள் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஒரு மாணவன் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். ஏனைய நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஆவார். இவர் இந்த ஆண்டு உயர்தர (A/L) வகுப்பில் கல்வி பயின்று வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாமடுப் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். உயிரிழந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டு, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தைத் தொடர்ந்து குளங்கள் மற்றும் நீர்நிலைகள் அதிக நீர்மட்டத்தைக் கொண்டுள்ளதால், ஆழம் தெரியாத பகுதிகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

