வென்னப்புவ, நைனமடம பாலத்திலிருந்து ஜின் ஓயா ஆற்றில் குதித்த 17 வயது சிறுமியைத் தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜா-எல, போபிட்டிய பகுதியைச் சேர்ந்த உமயங்கனா சத்சரணி (17) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்று (28) மாலை 5.30 மணியளவில் சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில் உள்ள நைனமடம பாலத்திற்கு அருகில் இளைஞன் ஒருவனுடன் இச்சிறுமி பேசிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து, சிறுமி திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.
சிறுமியைக் காப்பாற்றுவதற்காக அவருடன் இருந்த 18 வயது இளைஞனும் ஆற்றில் குதித்துள்ளார். அருகிலிருந்த ஹோட்டல் ஊழியர்கள் கயிற்றை வீசி அந்த இளைஞனை மீட்டுள்ளனர். எனினும், சிறுமி நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
மீட்கப்பட்ட இளைஞன் (நைனமடம பகுதியைச் சேர்ந்த ருமேஷ் லக்ஷன்) காயமடைந்த நிலையில் மாரவில அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன சிறுமியின் உடலைத் தேடும் பணியில் நேற்று உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்ட போதிலும் பலன் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, இன்று (29) காலை முதல் கடற்படையின் சுழியோடிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.