இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரு அரசுப் பேருந்தின் மீது லொறி ஒன்று மோதியதில் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாகச் சேதமடைந்தது. விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதேநேரம், நேற்று (நவம்பர் 02) ராஜஸ்தான் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது பேருந்து மோதிய கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.