கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப்பின் ‘ட்ரூத்’ சமூக வலைதளப் பதிவு: “கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனேடியப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மீது உடனடியாக 100% வரி விதிக்கப்படும். கனடாவை சீனப் பொருட்களுக்கான ‘இறங்குத் துறையாக’ (Drop Off Port) மாற்ற கார்னி நினைத்தால் அது பெரும் தவறு” என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கடந்த வாரம் சீனாவுடன் ஒரு “மூலோபாய கூட்டாண்மையை” அறிவித்ததோடு, கனேடிய விவசாயப் பொருட்களுக்கு வரிச்சலுகை பெறுவதற்குப் பதிலாக, சீன மின்சார வாகனங்களை (EVs) இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பிரதமர் கார்னி ஆற்றிய உரையே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு சிதைந்துவிட்டதாகக் கார்னி குறிப்பிட்டார்.
அமெரிக்கா போன்ற பெரிய வல்லரசுகளின் பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிராக நடுத்தர நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “அமெரிக்காவால் தான் கனடா பிழைத்துக் கொண்டிருக்கிறது” எனச் சாடியதுடன், கனடா பிரதமர் கார்னியை “கவர்னர் கார்னி” (கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாகச் சித்தரிக்கும் வகையில்) என அழைத்து எள்ளி நகையாடினார்.
தனது புதிய ‘அமைதி ஒப்பந்தத்தில்’ (Board of Peace) சேர கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளார்.’கோல்டன் டோம்’ (Golden Dome) ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் தொடர்பாகக் கனடா எதிர்ப்புத் தெரிவித்ததும் இந்த விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த 100% வரி எச்சரிக்கை அமலுக்கு வந்தால், கனடாவின் வாகன உற்பத்தி, எரிசக்தி மற்றும் விவசாயத் துறைகள் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.