2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் (PAFFREL) தெரிவித்துள்ளது. இம்முறை கணக்கெடுப்பு முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் அனைத்து வீடுகளுக்கும் வருகை தரமாட்டார்கள். புதிதாகச் சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட ‘A’ மற்றும் ‘Aa’ பட்டியல்களைப் புதுப்பிக்க வேண்டிய வீடுகளுக்கும், தகவல் சேகரிக்கப்பட வேண்டிய அவசியமுள்ள வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் நேரில் செல்வார்கள்.
இந்தக் கணக்கெடுப்பு நடைபெறும் முறையை அவதானிக்க அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியானவரா என்பது குறித்து உத்தியோகத்தர்கள் வழங்கும் பரிந்துரைகளை அவர்கள் கண்காணிக்க முடியும்.
கணக்கெடுப்பின் போது ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், அது குறித்து உத்தியோகத்தருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க முடியும். அதன் பிரதியொன்றை மாவட்ட பிரதி அல்லது உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலைச் சீராகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பேணுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பெப்ரல் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.