சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டுப் பிரஜைகளிடம் மோட்டார் வாகனங்களை வழங்கக் கூடாது என்றும், மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
நேற்று (26) காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர இது குறித்து விளக்குகையில்:
இலங்கையில் செல்லுபடியாகும் சர்வதேச அல்லது உள்ளூர் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் தமது வாகனங்களைச் செலுத்துவதற்குக் கொடுக்கும் உரிமையாளர்களுக்கு எதிராகவே இந்தச் சட்ட நடவடிக்கை பாயும்.
நாட்டில் அண்மைய காலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வீதி விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு வாகனங்களைப் பெற்றுச் செல்லும்போது, அவர்களின் அனுமதிப்பத்திரத்தைச் சரிபார்க்க வேண்டியது வாகன உரிமையாளர்களின் கடமையாகும். முறையற்ற வாகனப் பயன்பாட்டால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க வீதி சோதனை நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாகன உரிமையாளர்கள் தேவையற்ற சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவும், வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒத்துழைப்பு வழங்குமாறு போக்குவரத்துத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.