ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

images 4

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய கட்சிகளுக்கு இடையிலான இணைப்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில், நாமல ராஜபக்சவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் (SLPP) புதிய கூட்டணியை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏற்கனவே சமர்ப்பித்த இணைப்பு முன்மொழிவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு கட்சியாக அணுகாமல், அவர்களைத் தனித்தனியாகத் தனது பக்கம் இழுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் அணுகுமுறை, கூட்டணியை உருவாக்குவதில் பெரும் தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய நாட்களில், நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார். இது ரணில் விக்கிரமசிங்கவுடனான ஒரு பரந்த கூட்டணியை நோக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டதால் ஏற்பட்ட தோல்விகளைச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், “இப்போதும் ஒன்றுபடாவிட்டால் எதிர்கால தேர்தல் வெற்றிகள் கடினமாகிவிடும்” எனத் தமது தலைமைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையின் ‘அலட்சியப் போக்கு’ காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சி தவிர்க்க முடியாமல் நாமல் ராஜபக்ச தலைமையிலான தரப்புடன் கைகோர்க்கும் சூழல் உருவாகி வருவதாகத் தென்னிலங்கை அரசியல் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Exit mobile version