யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில் இருந்த 81 வயதுடைய வயோதிபத் தாய் சிகிச்சை பலனின்றி இன்று (29) உயிரிழந்துள்ளார்.
அரியாலையைச் சேர்ந்த பரமசிவம் பரமேஸ்வரி (81 வயது) என்பவர் ஆவார்.
கடந்த 17 ஆம் திகதி, பரமேஸ்வரியின் மகள் வீட்டின் அருகே குப்பைகளைக் கூட்டித் தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு அவர் கடைக்குச் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில், தாயார் வீட்டின் உள்ளே அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.
வெளியே வைக்கப்பட்ட தீயானது ஜன்னல் வழியாக வீட்டிற்குள் ஊடுருவி, அங்கிருந்த ஆடைகளில் பற்றியுள்ளது. தொடர்ந்து தீ வேகமாகப் பரவி வீட்டின் கூரை மரங்களிலும், படுக்கையில் இருந்த வயோதிபத் தாய் மீதும் பற்றியுள்ளது.
தாயின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அருகில் வசித்த அவரது மற்றொரு மகள் ஓடிவந்து தீயைக் கட்டுப்படுத்தி, பலத்த காயங்களுடன் இருந்த பரமேஸ்வரியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், சுமார் 12 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை யாழ். திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். கவனக்குறைவாகத் தீ வைத்தமையால் ஏற்பட்ட இந்தச் சோகமான மரணம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.