இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் (East Jaintia Hills) மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதுவரை சுரங்கத்திலிருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உயர் அதிகாரி மணீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சுரங்கத்திற்குள் பாறைகளைத் தகர்க்கப் பயன்படுத்தப்படும் டைனமைட் (Dynamite) வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்துத் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் சுரங்கத்திற்குள் எத்தனை தொழிலாளர்கள் பணியில் இருந்தார்கள் என்பது குறித்த தெளிவான தரவுகள் இல்லை. எனவே, இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேகாலயாவில் ‘எலி வளை’ (Rat-hole mining) போன்ற அபாயகரமான நிலக்கரி அகழ்வு முறைகளுக்கு நீதிமன்றத் தடைகள் இருந்தபோதிலும், சட்டவிரோதமான முறையில் இத்தகைய சுரங்கங்கள் இயக்கப்படுவது இத்தகைய தொடர் விபத்துகளுக்குக் காரணமாக அமைவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.