முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற குளவி கொட்டுச் சம்பவத்தில், துணுக்காய் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
துணுக்காய் கல்வி வலயத்தில் ஆரம்ப பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த அன்ரனி ஜோர்ஜ் என்பவரே உயிரிழந்த அரச உத்தியோகத்தராவார்.
மாங்குளம் பழைய கொலனி பகுதியில் வீதியோரம் இருந்த குளவி கூடு ஒன்று திடீரென கலைந்து, அந்த வீதியால் சென்றவர்களைத் தாக்கியுள்ளது.
பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கடும் பாதிப்புக்குள்ளான உதவிக் கல்விப் பணிப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மூன்று மாணவர்களுக்கும் மாங்குளம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் குளவி கூடு கலைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அப்பகுதியில் உள்ள ஏனைய குளவி கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.