ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 03) மாலை 6 மணிக்கு இந்த விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் இந்தப் தீர்மானம் குறித்து, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே நேற்று (30) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேரில் சென்று அறிவித்தார்.
பாடசாலைகளில் பயிற்சி பெற்று வரும் இந்தப் பட்டதாரிகள், நீண்டகாலமாக நிலவும் தமது கோரிக்கையான ‘சேவையை நிரந்தரமாக்குதல்’ என்பதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளுடன் முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஜனாதிபதியே நேரடியாகப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளமை போராட்டக்காரர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.