மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு பகுதியில், கடந்த 40 வருடங்களாகக் கவனிப்பாரற்றுக் காணப்பட்ட வீதியொன்று மக்கள் பாவனைக்காக மீளத் திறக்கப்பட்டுள்ளது.
மாங்காடு பகுதியில் அமைந்துள்ள ‘விதானையார் வீதி’ நீண்டகாலமாகப் பராமரிக்கப்படாமல் பற்றைக்காடாக மூடிக்கிடந்தது.
இந்த வீதி மூடப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது விளைபொருட்களைக் கொண்டு செல்வதிலும், வயல் நிலங்களுக்குச் செல்வதிலும் பாரிய சவால்களை எதிர்கொண்டு வந்தனர்.
விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கையையடுத்து, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஜே.சி.பி (JCB) இயந்திரங்கள் மூலம் வீதியை மூடியிருந்த பற்றைக்காடுகள் அகற்றப்பட்டு, நேற்று (28) சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.தற்போது இந்த வீதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் செப்பனிடப்பட்டுள்ளது.
தமது பல தசாப்த காலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை ஒரு வெற்றியாகக் கருதுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அத்துடன், துரித கதியில் வீதியைச் செப்பனிட்ட பிரதேச சபையின் செயல்பாட்டிற்கு அப்பகுதி மக்கள் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்த வீதி திறக்கப்பட்டதன் மூலம் மாங்காடு பிரதேசத்தின் விவசாய உற்பத்தி நடவடிக்கைகள் மேலும் ஊக்கமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.