முன்னைய அரசாங்கங்களை விடவும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவை தீவிரமாகக் காதலித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்பு இந்திய எதிர்ப்பு மாதத்தை (Indian Boycott) அனுசரித்தவர்களுக்கு, இன்று இந்தியா இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என அவர் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.
ஜே.ஆர். ஜெயவர்த்தன முதல் ரணில் விக்கிரமசிங்க வரை இலங்கையை ஆட்சி செய்த எந்தத் தலைவரையும் விட, அநுரகுமார அரசாங்கமே இந்தியாவைத் தற்போது தீவிரமாகக் காதலிக்கிறது என அவர் சாடினார்.
ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணம்: ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தற்போது இந்தியாவில் தங்கியிருப்பதையும், ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ள இந்தியப் பயணத்தையும் அவர் தனது வாதத்திற்கு ஆதாரமாக முன்வைத்தார்.
உங்களுக்காக உயிர்கொடுத்தவர்களும், உங்களால் கொல்லப்பட்டவர்களும் உங்களின் இந்த ‘இந்திய லவ்’-வைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு வெட்கமில்லையா? இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஜே.வி.பி தனது ஆரம்பகால அரசியலில் இந்திய விஸ்தரிப்புவாதத்திற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. இருப்பினும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தை உணர்ந்து அதனுடன் நெருக்கமான இராஜதந்திர உறவைப் பேணி வருகின்ற நிலையில், எதிர்க்கட்சிகள் இதனைச் சாதகமாகப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி வருகின்றன.