பேரிடர் நிவாரணம்: இத்தாலியத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துக் கலந்துரையாடல்!

591547131 1415777287218214 8631467082026287584 n

‘டித்வா’ சூறாவளிப் புயலால் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், இலங்கைக்கான இத்தாலியக் குடியரசின் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் (Damiano Francovigh) அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (டிசம்பர் 2) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக எழுந்துள்ள பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.

தற்போதைய பேரிடர் நிலைமை, அதன் பின்னர் ஏற்படக்கூடிய பேரிடருக்குப் பிந்தைய நிலைமை மற்றும் தொற்றுநோய் நிலைமையை கையாள இத்தாலியக் குடியரசால் இந்நேரத்தில் இலங்கைக்குப் பெற்றுத் தர முடியுமான அதிகபட்ச பங்களிப்பைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் வைத்தியசாலைகளின் சேவைகளைப் பேணிச் செல்வதற்கும், சேதமடைந்த ரயில் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வீதிப் போக்குவரத்து கட்டமைப்புக்களைப் புனர்நிர்மாணம் செய்வதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இத்தாலி தூதுவரிடம் உதவி கோரினார்.

இத்தாலியக் குடியரசின் உதவியின் மூலம், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மீள்நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version