இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின்” (ICCR) விசேட அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேற்று (06) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை அடுத்தகட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
அண்மையில் இலங்கையைப் பாதித்த டித்வா (Ditwah) புயலின் போது, இந்தியா உடனடியாக வழங்கிய மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்புப்பணி ஒத்துழைப்புகளுக்கு ரில்வின் சில்வா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான இந்தியாவின் ஆதரவு என்றும் தொடரும் என அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்தார். குறிப்பாக ‘அண்டை நாட்டுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், ரில்வின் சில்வாவின் இந்தப் பயணம் அதற்கான ஆரம்பகட்ட இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி.யின் உயர்மட்டக் குழுவினர் இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய இராஜதந்திர நெருக்கத்தைக் காட்டுகிறது.