தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பிள்ளைகளை அந்தந்த பாடசாலைகளிலேயே அனுமதிக்கும் சலுகை நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று (05) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உணர்வுபூர்வமான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய பாடசாலைகளில் மூன்று வருடங்கள் சேவையை நிறைவு செய்யும் ஊழியர்களின் பிள்ளைகளை, அதே பாடசாலையில் சேர்ப்பதற்கான முன்னுரிமை நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது.
2025 ஆம் ஆண்டு முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ‘தேசிய பாடசாலை ஆசிரியர் – பிள்ளைகள் ஒன்றியம்’ குற்றம் சுமத்துகின்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களும் பணியாளர்களும் தங்களது சிறு பிள்ளைகளுடன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், சாதகமான தீர்வு எட்டப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தமது கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமான உறுதிமொழி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்து, பிள்ளைகளுடன் வீதியிலேயே அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சலுகை நிறுத்தப்பட்டதால், ஆசிரியர்கள் தமது பிள்ளைகளைத் தூர இடங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும், இது அவர்களின் கல்விப் பணியைச் சரிவரச் செய்யத் தடையாக இருக்கும் என்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

