கிளிநொச்சி மாவட்டம், பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பளை நகர் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி (வயது 63) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மோதலின் தீவிரத்தினால் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பெண் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் ஓட்டுநரை பளை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
பளை நகர் பகுதியில் இந்த விபத்து காரணமாகச் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, அப்பகுதியில் சோகமான சூழல் காணப்பட்டது.

