அண்மையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற துணைச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நான்கு சர்வதேச அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ரீதியில் தனது நியாயத்தை முன்வைக்க அவர் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம், பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம், நாடாளுமன்றங்களின் பொதுச் செயலாளர்களின் சர்வதேச மன்றம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு அமைப்புகளை நாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரண்டாவது மிக மூத்த அதிகாரியான சமிந்த குலரத்ன மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், முறையான முதற்கட்ட விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவருக்குத் தனது தரப்பு நியாயத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படாமல், சபாநாயகர் நேரடியாக இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்தது நீதிக் கொள்கைகளுக்கு முரணானது என அவரது தரப்பு வாதிடுகிறது.
நாட்டின் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவொன்று இந்த முறைப்பாடுகளைத் தயாரித்து வருவதுடன், இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யவும் தயாராகி வருகின்றது.
சபாநாயகரின் இந்தத் தீர்மானம் நாடாளுமன்ற நிர்வாகக் கட்டமைப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச அமைப்புகளின் தலையீடு இவ்விவகாரத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

