லாஸ் வேகாஸில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்றின் சக்கரம், அது வானில் எழும்பிய சில நிமிடங்களிலேயே கழன்று விழுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Airbus A350-1000 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், திங்கட்கிழமை இரவு 9:10 மணியளவில் லாஸ் வேகாஸின் ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்டது.
விமானம் ஓடுபாதையை விட்டு வானில் ஏறிக்கொண்டிருந்த போதிலேயே, அதன் தரையிறங்கும் தொகுதியிலிருந்து (Landing Gear) ஒரு சக்கரம் தனியாகக் கழன்று கீழே விழுந்தது. இக்காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
சக்கரம் கழன்று விழுந்ததை விமானிகள் அறிந்திருந்த போதிலும், மற்ற சக்கரங்களின் உதவியுடன் விமானத்தைத் தொடர்ந்து இயக்க முடிந்தது. சுமார் 10 மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, அட்லாண்டிக் கடலைக் கடந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் திட்டமிட்ட நேரத்திற்கு 27 நிமிடங்கள் முன்னதாகவே விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
ஓடுபாதையில் விழுந்த சக்கரம் பின்னர் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கோ அல்லது விமான நிலையத்திற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பாதுகாப்பே எமது முதன்மையான நோக்கம் எனத் தெரிவித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ், நவீன ரக Airbus A350 விமானத்தில் இவ்வாறான தொழில்நுட்பக் குறைபாடு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தச் சம்பவம் சர்வதேச விமானப் போக்குவரத்து வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.