19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்று (29) நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை அணி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி சார்பாக ஜோரிச் வான் ஷால்க்விக் (Jorich Van Schalkwyk) மிகச்சிறப்பாக விளையாடி 116 ஓட்டங்களைக் குவித்தார். இலங்கை அணி சார்பாகப் பந்துவீச்சில் மிரட்டிய விக்னேஸ்வரன் ஆகாஷ் 4 விக்கெட்டுகளையும், கவீஜ கமகே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி எதிரணியைக் கட்டுப்படுத்தினர்.
262 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கிப் களமிறங்கிய இலங்கை இளம் சிங்கங்கள், ஆரம்பம் முதலே நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் விரான் சமுதித்த அபாரமாக விளையாடி 110 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.இலங்கை அணி 46 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று, 4 ஓவர்கள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை இளையோர் அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ளதுடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் பலப்படுத்தியுள்ளது. பந்துவீச்சில் ஆகாஷ் மற்றும் துடுப்பாட்டத்தில் சமுதித்த ஆகியோரின் பங்களிப்பு இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.