திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலை வைக்கப்பட்டமை மற்றும் அதனை அகற்ற முற்பட்டபோது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பான வழக்கில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதம் 16-ஆம் திகதி, திருகோணமலை கடற்கரை பகுதியில் உரிய அனுமதியின்றி கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது.
பொலிஸார் அந்தச் சிலையை அகற்ற முற்பட்டபோது, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் பிரதேச மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அங்கு நீண்ட நேரம் அமைதியற்ற சூழல் நிலவியது.
அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று (02) இந்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய 5 சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9-ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.