டெல்லியில் அண்மையில் நடந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய சந்தேக நபர்கள், எதிர்வரும் இந்தியக் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) செங்கோட்டைப் பகுதியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த வழக்கின் முக்கியச் சந்தேக நபரான ஒரு வைத்தியர், காவல்துறையினரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
வெடிப்பு நடப்பதற்கு முன்னரே, தாமும் தமது சகாவான உமர் என்பவரும் இணைந்து செங்கோட்டைப் பகுதியை நோட்டமிட்டதாக அந்த வைத்தியர் தெரிவித்துள்ளார். இது குடியரசு தினத் தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டதாகவும், ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
செங்கோட்டையை நோட்டமிட்டதாகக் கூறப்படும் வைத்தியரின் சகாவான உமர் என்பவரே, செங்கோட்டை மெட்ரோ தொடருந்து நிலையம் அருகே சிற்றூந்து வெடித்தபோது உயிரிழந்தவர் என நம்பப்படுவதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்துப் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.