ஜப்பானில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 08) நடைபெறவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போதைய பிரதமர் சனாயே டகாயிச்சிக்கு (Sanae Takaichi) தனது பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
வழக்கமாகப் பிற நாடுகளின் உள்நாட்டுத் தேர்தல்களில் அமெரிக்க ஜனாதிபதிகள் தலையிடுவதில்லை என்ற மரபை உடைத்து, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் டகாயிச்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளார். டகாயிச்சி ஒரு வலுவான, சக்திவாய்ந்த மற்றும் புத்திசாலித்தனமான தலைவர் என அவர் வர்ணித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி டகாயிச்சியை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதற்குத் தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்ற 64 வயதான சனாயே டகாயிச்சி, ட்ரம்ப்புடன் மிகவும் இணக்கமான உறவைப் பேணி வருகிறார்.
ட்ரம்ப்பின் 25% வரி விதிப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டொலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. இதற்குப் பதிலாக, ஜப்பானிய இறக்குமதிகள் மீதான வரியை அமெரிக்கா 15% ஆகக் குறைத்தது.
பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிக்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கையை டகாயிச்சி ஏற்றுக்கொண்டுள்ளார்.
டகாயிச்சியின் கடும்போக்குக் கொள்கைகள் பெய்ஜிங்கிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடந்த நவம்பரில் அவர் ஆற்றிய உரையில் “தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தினால், அது ஜப்பானின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட சவாலாகக் கருதப்பட்டு, ஜப்பான் இராணுவ ரீதியாகப் பதிலடி கொடுக்கும்.”
இந்தக் கருத்திற்குச் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, டகாயிச்சியின் தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 465 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் 300-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி, மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.