சிவில் பாதுகாப்புப் படையின் (CSD) வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், சுமார் 15,000 படையினரை ஏனைய அரச திணைக்களங்களில் இணைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது இந்த முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து சுமார் 10,000 பேரைப் பொலிஸ் துறையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. காடுகள் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பிற்காகச் சுமார் 5,000 படையினரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
சிவில் பாதுகாப்புப் படையை நவீனமயப்படுத்துவதற்கும் அதன் மனித வளத்தை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கும் அமைச்சர் பல வாக்குறுதிகளை அளித்தார். படையினருக்கான தங்குமிடங்கள் மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.
புதிய பணிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படையின் ஒட்டுமொத்த வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே அரசின் இலக்காகும்.
யுத்த காலத்திற்குப் பின்னர் சிவில் பாதுகாப்புப் படையினரின் சேவையைப் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.