சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் இணைந்து ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike) திட்டத்தின் கீழ் நேற்று (ஜனவரி 10) மீண்டும் ஒருமுறை பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
கடந்த டிசம்பர் 13 அன்று சிரியாவின் பல்மைரா (Palmyra) பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதி ஒருவரால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில், அயோவா தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு அமெரிக்க வீரர்கள் மற்றும் அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் அயாத் மன்சூர் சகாத் (Ayad Mansour Sakat) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக உறுதியளித்திருந்தார்.
சிரியா முழுவதும் ஐஎஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டளை மையங்கள் என சுமார் 35-க்கும் மேற்பட்ட நிலைகள் மீது 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் அமெரிக்காவின் F-15E, A-10 போர் விமானங்கள், AC-130J ரக விமானங்கள் மற்றும் ஜோர்தான் நாட்டின் F-16 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இதற்கு முன்னதாக டிசம்பர் 19 அன்று நடத்தப்பட்ட முதற்கட்டத் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட ஐஎஸ் இலக்குகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் வீரர்களுக்கு நீங்கள் தீங்கு விளைவித்தால், உலகின் எந்த மூலையில் நீங்கள் ஒளிந்திருந்தாலும் உங்களைக் கண்டுபிடித்து அழிப்போம். நீதியிலிருந்து உங்களால் தப்ப முடியாது என்பதே எங்களது வலுவான செய்தி.
இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக, ஐஎஸ் அமைப்பின் முக்கிய இராணுவத் தலைவர் ஒருவரைச் சிரியப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
US Forces Launch “Operation Hawkeye Strike” in Syria; Massive Airstrikes Target ISIS in Retaliation for Palmyra Attack.