சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

1769590369 images 18

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் இன்று (28) புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய எச்.எம்.டபிள்யூ.பீ. பண்டார என்ற சிப்பாயே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

குறித்த சிப்பாய் தனது வயிற்றுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காகத் தீவிர நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது திட்டமிட்ட தற்கொலை முயற்சியாவென அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என்பது குறித்து இராணுவப் பொலிஸாரும் சாவகச்சேரி பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தால் குறித்த இராணுவ முகாம் பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Exit mobile version