கெஹெலியவின் ரூ. 748 மில்லியன் மோசடி விவகாரம்: பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு விளக்கமறியல்!

Keheliya Rambukwella 696x397 1

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஒருவரை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தனது பதவிக்காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுமார் ரூ. 748 மில்லியன் பணத்தை ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைச் சலவை (Money Laundering) செய்த விவகாரம் குறித்துக் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த மோசடி வலையமைப்பில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த தொழிலதிபர் மீது தனக்குச் சொந்தமில்லாத ரூ. 30 மில்லியன் பணத்தைத் தனது வசம் வைத்திருந்தமை, குறித்த பணம் சட்டவிரோதமானது என்று தெரிந்தே அதனைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த கொழும்பு தலைமை நீதவான், சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க மறுப்புத் தெரிவித்ததுடன், எதிர்வரும் பெப்ரவரி 10 வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலதிக விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version