காபூலில் எஞ்சியுள்ளோரை மீட்க படைகளை அனுப்புகிறது பரிஸ் –  625 ஆப்கானியர்களுக்கும் தஞ்சம்

காபூலில் எஞ்சியுள்ளோரை மீட்க படைகளை அனுப்புகிறது பரிஸ் –  625 ஆப்கானியர்களுக்கும் தஞ்சம்

மக்ரோன் இன்றிரவு விசேட உரை

விமான நிலையத்திற்கு மாற்றம்

காபூல் நகரைச் சுற்றிவளைத்துள்ள தலிபான்கள்அங்குள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை “ஆப்கான் இஸ்லாமிய அமீரகம்”(Islamic Emirate of Afghanistan) என்று பிரகடனப்படுத்திஅறிவித்துள்ளனர்.அதிபர் மாளிகைக்குள் தலிபான்கள் தொழுகையில் ஈடுபடுகின்ற காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி உள்ளன.

FB IMG 1629097550652

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கின்ற கவலைதரும் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக அதிபர் மக்ரோன் விசேட பாதுகாப்புச்சபைக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார்.

கூட்டத்துக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து இன்று திங்கள் இரவு எட்டு மணிக்கு அவர் தொலைக்காட்சி உரை ஊடாக விளக்கமளிப்பார் என எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.

காபூலில் இன்னமும் தங்கியுள்ள தூதரகப் பணியாளர்கள் உட்படநூற்றுக்கணக்கான பிரெஞ்சுப் பிரஜைகளை அங்கிருந்து மீட்டுவரும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து விமானங்கள் காபூலுக்கு அனுப்பப்படுகின்றன.இந்த மீட்புப்படை நடவடிக்கைக்கு “ஒப்பரேஷன் ஆப்கான்” (Operation Apagan) என பெயரிடப்பட்டிருக்கிறது.

பிரான்ஸின் ராஜதந்திரிகளுக்கும் அங்கு நிலைகொண்டிருந்த படையினருக்கும் மொழிபெயர்ப்பு உட்பட பல வழிகளில் உதவியாளர்களாகப் பணியாற்றி வந்த ஆப்கானியர்கள் பலருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரான்ஸில் தஞ்சம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடன் சேர்ந்து தலிபான்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாடாளர்கள், கலைஞர்கள் உட்பட 625 ஆப்கானியப் பிரஜைகளும் அங்கிருந்து மீட்டுவரப்படவுள்ளனர்.

இதேவேளை –

ஆப்கானிஸ்தானில் இயங்கிய பிரான்ஸின் தூதரகம் காபூல் சர்வதேச விமான நிலையத்தை உள்ளடக்கிய பச்சை வலயத்துக்கு (Green Zone) இடமாற்றப்பட்டிருக்கிறது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது. இப்போதைக்கு பல நாடுகளின் ராஜதந்திரப் பணிகள் அங்கிருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

Exit mobile version