அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கண்டி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
மண் சரிவு ஏற்பட்ட இடமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ஆபத்தான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டி மேலதிக மாவட்டச் செயலாளர் திலித் நிஷாந்தா குறிப்பிட்டுள்ளார்.
பாதிப்புக்குள்ளான கட்டிடத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆராயப்படும் என்றும், அந்தப் பகுதியைச் சுற்றி இன்னும் பல ஆபத்தான பாறைகள் உள்ளன என்றும், இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்தின்போது கொங்ரீட் தளத்திற்குள் சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) தெரிவித்துள்ளது.
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள பஹல கடுகண்ணாவ கணேதென்ன பகுதியில் நேற்று முன்தினம் (நவம்பர் 22) காலை 9.00 மணியளவில், ஒரு பெரிய பாறை மற்றும் மண் மேடு வீடு மற்றும் உணவகத்தின் மீது சரிந்து விழுந்ததில், விரிவுரையாளர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் உணவகத்தில் பணிபுரிந்த மூன்று பேரும், உணவு பெற வந்த மூன்று பேரும் அடங்குவர்.
உணவக உரிமையாளரின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சமையல்காரர்.
உணவு பெற வேனில் வந்த இரண்டு பேர். காயமடைந்த நான்கு பேர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்தமையினால் கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஒரு சில நிமிடங்களில் அந்த இடமே தரைமட்டமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. முப்படையினருடன் அந்தப் பகுதி மக்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

