தங்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தைச் சேர்ந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தங்களை, ஆசிரியர் சேவைக்குள் உடனடியாக உள்வாங்குமாறு வலியுறுத்தி இந்த உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி 26 ஆம் திகதி சத்தியாக்கிரகமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், அதிகாரிகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காததால் அன்றே ‘சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக’ மாற்றப்பட்டது.
இன்று இந்தப் போராட்டம் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரில் இதுவரை மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உத்தியோகத்தர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
எஞ்சியிருந்த இருவரில் ஒருவரின் உடல்நிலை இன்று காலை மோசமடைந்ததை அடுத்து, அவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஒரு உத்தியோகத்தர் மாத்திரம் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசாங்கம் இது குறித்து இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

