இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகச் சட்ட உளவியல் விசேட வைத்திய நிபுணர் தாரக பெர்னாண்டோ கவலை வெளியிட்டுள்ளார்.
2015 – 2016 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டனை பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 200 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இந்நிலை தொடருமானால், எதிர்காலத்தில் நாட்டின் சிறைச்சாலைகள் இளைஞர்களால் நிரம்பி வழியும் ஒரு “பேரழிவு நிலைமை” ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். இது இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியிலும் அவதானிக்கப்படும் ஒரு போக்காக உள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்ற சமூகத்தின் பொதுவான கருத்து முற்றிலும் தவறானது என வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களிடம் அதிக ஆக்கபூர்வமான திறன்கள் காணப்படுகின்றன. விஞ்ஞான ரீதியான புனர்வாழ்வு மற்றும் சரியான சிகிச்சை மூலம் அவர்களின் ஆற்றலை நல்வழிப்படுத்த முடியும்.
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சட்ட உளவியல் மருத்துவப் பிரிவு இலங்கையில் அமைந்துள்ளதை வைத்தியர் உறுதிப்படுத்தினார். இப்பிரிவின் முக்கியப் பணிகள் குற்றத்தைச் செய்த தருணத்தில் நபரின் மனநிலையை ஆராய்தல். நீதிமன்றத்தில் வாதாடும் அளவுக்கு அவர்கள் மனத்திறன் கொண்டுள்ளனரா எனக் கண்டறிதல். சிகிச்சையின் ஊடாகச் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகும்.
தேசிய மனநல நிறுவகம் (NIMH) 100 ஆண்டுகளைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

