மனித உரிமை ஆர்வலர் ரி.குமார் என்று அழைக்கப்படும் த. முத்துக்குமாரசாமிக்கான உருக்கமான அஞ்சலி நிகழ்வு, வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் நேற்று (27) அனுஷ்டிக்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள், ரி.குமாரின் பங்களிப்பை பின்வருமாறு நினைவுகூர்ந்தனர்:
எங்களால் பேச முடியாத இக்கட்டான காலங்களில், எமது வலிகளையும் நீதிக்கான குரலையும் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு சென்றவர் ரி.குமார். 146,000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், 30,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் நீதி வேண்டி நாம் இன்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
1948 முதல் தமிழ் அரசியல் முயற்சிகள் தோல்வியடைந்து வந்த சூழலில், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மையப்படுத்திப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இரண்டாம் தலைமுறை ஆளுமைகளில் அவர் முக்கியமானவர்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பால் ‘மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட கைதி’ என அங்கீகரிக்கப்பட்டவர். சிறைவாசம் மற்றும் துன்பங்களை அனுபவித்த போதிலும், தனது கல்வி அறிவை முழுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே அர்ப்பணித்தார்.
நாடாளுமன்ற அரசியலின் மாயைகளுக்கு அப்பால், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச ரீதியிலான நீதியைத் தமிழ் மக்களின் போராட்டத்தின் மையப்பொருளாக மாற்றியதில் ரி.குமாருக்குப் பெரும் பங்கு உண்டு என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது போராட்டப் பயணத்தில் ரி.குமார் ஆற்றிய தன்னலமற்ற சேவையை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

