உயிரிழை அமைப்பில் 23 கோடி ரூபா நிதி மோசடி? – முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

24 66a66df53bbf3

புலம்பெயர் உறவுகளால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட சுமார் 23 கோடி ரூபா நிதியில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ‘உயிரிழை’ அமைப்பின் உறுப்பினர் சா.குகதாசன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.

2002 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில் புலம்பெயர் மக்களால் வழங்கப்பட்ட 23 கோடிக்கும் மேற்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக, ஒரு வருடகால கணக்கறிக்கையில் 8 கோடியே 80 இலட்சம் ரூபா வரவு காட்டப்பட்டாலும், அது சரியான முறையில் பயனாளிகளுக்குச் சென்றடையவில்லை.

அமைப்பின் பெயரில் பெறப்பட்ட நிதியில், சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பொருளாளராக இருந்தவரின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தரவுகளைப் பெற முயன்றபோது அமைப்பின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

அமைப்பில் இருந்த 250 பயனாளிகளில் 56 முன்னாள் போராளிகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். தற்போதுள்ள 196 பேரில் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையின்றி உயிருக்குப் போராடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் புண்கள் மற்றும் உடல்நிலை பாதிப்புகளை இணையத்தில் காட்டி, நிதி திரட்டி அதனை வியாபார நோக்கமாக நிர்வாகத்தினர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பராமரிப்பு விடுதியில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையைத் தவறாகக் காட்டி, உணவுத் திட்டங்கள் மூலம் பணம் மோசடி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து வவுனியா பிரதேச செயலாளரிடம் 14 குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதம் சமர்ப்பிக்கப்பட்டும், உரிய பதில் கிடைக்கவில்லை என குகதாசன் தெரிவித்தார். மேலும், “வடக்கு – கிழக்கு பிரச்சினைகளுக்குத் தொடர்பில்லை” என பிரதேச செயலாளர் பதிலளித்ததாகவும், ஆனால் அவர் 61 இலட்சம் ரூபா பணப் பரிமாற்றத்திற்கு கையொப்பமிட்டு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும் சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்குத் தெரிவித்தும் தீர்வு கிடைக்காத நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றின் மூலம் குறித்த நிர்வாகிகள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Exit mobile version