நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் (Economics) பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் (Department of Examinations) பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகக் கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன.
இது குறித்துப் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சமூக ஊடகங்களில் பரவிய தகவலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரிப் பரீட்சைகள் திணைக்களம் CID-யிடம் முறைப்பாடு செய்துள்ளது.