ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான விசாரணை மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு!

hemasiri pujitha 1

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையைப் புறக்கணித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரிப்பதற்கான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்னும் பெயரிடப்படாத காரணத்தினால், வழக்கை எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றப் பதிவாளர் இன்று (26) உத்தரவிட்டார்.

முன்னதாக, இவ்வழக்கில் இருந்து ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களைக் கோராமலேயே விடுதலை செய்ய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேல் நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பிற்கு எதிராகச் சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தது:

பிரதிவாதிகளை விடுதலை செய்த மேல் நீதிமன்றத் தீர்ப்பை இரத்துச் செய்தது.

பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை முறையாக அழைத்த பின்னர், புதிய தீர்ப்பொன்றை வழங்குமாறு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

அதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version