சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், அவற்றை மீளப் பெறுவதற்கு நாளை (ஜனவரி 30) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.எஸ்.ஐ. குமார விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது:
2025 ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு முன்னர் சுயவிருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்திருந்தாலும், தற்போது அந்த முடிவை மாற்றி புதிய நிறுவனக் கட்டமைப்பின் கீழ் தொடர விரும்பும் ஊழியர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை மீளப் பெறுவதற்கான கோரிக்கைகள் 2026 ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகப் பொது முகாமையாளர் கிளைக்குக் கிடைக்க வேண்டும்.
ஜனவரி 30 ஆம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் எவ்விதக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது என மின்சார சபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அனைத்து பிரிவு மற்றும் கிளைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஊழியர்கள் புதிய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.