இலங்கையிலுள்ள 60 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் சுமார் 30 வீதமானோர் பல்வேறு மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதியோர் மக்கள்தொகை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவர்களது மனநலம் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் மிகக் குறைவாகவே உள்ளது.
மறதி (Dementia) மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற நோய் அறிகுறிகளைப் பலரும் “வயதானால் இது சகஜம்” எனச் சாதாரணமான ஒன்றாகக் கருதுகின்றனர். சில நேரங்களில் இவை மூடநம்பிக்கைகளுடன் ஒப்பிடப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மனநலப் பாதிப்புகள் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதுடன், அவர்களுக்குத் தேவையற்ற உடல் ரீதியான சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன.
முதியவர்களின் மனநலனை மேம்படுத்த தேசிய மனநல காப்பகத்தில் (National Institute of Mental Health) பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
1999 ஆம் ஆண்டு முதல் முதியவர்களுக்கெனத் தனியான பிரிவு இயங்கி வருகிறது.ஆண்கள் மற்றும் பெண்களுக்கென இரண்டு தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதிகள் உள்ளன.
அண்மையில் தீகாயு எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பகல்நேர சிகிச்சை நிலையம் ஊடாக உளச்சிகிச்சை மற்றும் நடத்தை முறைகள் சார்ந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மன அபிவிருத்தி ஊடாக வாழ்க்கை மாற்றம் எனும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், முதியவர்களின் மன மாற்றங்களை நோயின் அறிகுறிகளாகப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்க முன்வருமாறு சமூகத்தைக் கேட்டுக்கொண்டார்.

