இலங்கையின் கல்வித்துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும், மாணவர்களின்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முறையான டிஜிட்டல் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்ப சாதனங்களை மாணவர்கள் பயன்படுத்தும் போது, அவர்களின் வயதுக்கு ஏற்ப சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டக் கட்டமைப்புக்குள் இத்திட்டங்கள் அமையும்.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாகப் பெறப்படும் டிஜிட்டல் சாதனங்கள், எவ்வித பாரபட்சமுமின்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
டிஜிட்டல் கருவிகளைக் கையாள்வதற்குத் தேவையான பயிற்சிகள் ஏற்கனவே ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நவீன உபகரணங்களை வினைத்திறனாகப் பயன்படுத்த முறையான மனிதவளத் திட்டமிடல் அவசியம் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கல்வி அமைச்சின் ‘இசுருபாய’ அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் ‘Huawei’ நிறுவனம் மற்றும் யுனெஸ்கோ (UNESCO-INRULED) பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் கிராமப்புற பாடசாலைகளுக்கு ‘ஸ்மார்ட் வகுப்பறை’ (Smart Classroom) வசதிகள் மற்றும் ஊடாடும் திரைகளை (Interactive Screens) வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் மாற்றமானது வெறும் உபகரணங்களுடன் மட்டும் நின்றுவிடாமல், அவற்றை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் கையாள்வதை உறுதிப்படுத்தக் காவல்துறையின் இணையக் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைகள் பெறப்படவுள்ளன.
இந்தத் திட்டமானது இலங்கையின் கல்வித் தரத்தை உலகளாவிய ரீதியில் உயர்த்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.