2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர இது குறித்துத் தெரிவிக்கையில், ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 581 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக நிலவிய மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமை இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், இருமல், சளி, கடுமையான உடல்வலி மற்றும் வாந்தி அறிகுறிகள் இருந்தால் கூடுதல் கவனம் தேவை:
காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC) செய்துகொள்வது கட்டாயமாகும். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், தாமதிக்காமல் தகுதியான வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வீடு மற்றும் சூழலில் நீர் தேங்கும் இடங்களை அகற்றி, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

