இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) 106-வது கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி (Sarah Mullally) நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். இதன் மூலம் 500 ஆண்டுகால வரலாற்றில் இப்பெரும் பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
63 வயதான சாரா முல்லாலி, மதப்பணிக்கு வருவதற்கு முன்னர் ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் (Oncology Nurse) பணியாற்றியவர்.
சிறுவர் துஷ்பிரயோக புகார்களைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டில் 2024-ல் பதவி விலகிய ஜஸ்டின் வெல்பிக்கு (Justin Welby) பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த நியமனம், நேற்று நீதிபதிகள் முன்னிலையில் நடந்த சட்டபூர்வ தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் உத்தியோகபூர்வமானது.
சாரா முல்லாலியின் நியமனம் ஒரு வரலாற்று மைல்கல்லாகக் கருதப்பட்டாலும், அது அங்கிலிக்கன் கூட்டமைப்பிற்குள் (Anglican Communion) விவாதங்களைக் கிளப்பியுள்ளது:
ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பழைமைவாத ஆயர்கள், பெண்கள் ஆயர் பதவியை வகிப்பதை மத ரீதியாக எதிர்க்கின்றனர்.
மாற்றுப் பாலினத் திருமணங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதை சாரா ஆதரிப்பதால், ருவாண்டா போன்ற நாடுகளின் மதத் தலைவர்கள் இவரது தலைமையின்கீழ் செயல்பட மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
திருச்சபைக்குள் நிலவும் பாலியல் துஷ்பிரயோகப் புகார்கள் குறித்த விசாரணை முறைகளை முழுமையாகச் சீரமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு இவரிடம் உள்ளது.
எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி கென்டர்பரி கதீட்ரலில் (Canterbury Cathedral) நடைபெறும் விசேட வழிபாட்டுடன் அவர் முறைப்படி ஆயராகப் பொறுப்பேற்று, தனது உலகளாவிய ஆன்மீகப் பணிகளைத் தொடங்குவார்.
கத்தோலிக்க திருச்சபை இன்றும் பெண்களுக்கு மதகுரு உரிமையை வழங்காத நிலையில், இங்கிலாந்து திருச்சபையின் இந்த நகர்வு ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.