உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அமேசன் (Amazon), உலகளாவிய ரீதியில் மேலும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, நிறுவன உயர் அதிகாரி ஒருவரின் உதவியாளரால் ‘Project Dawn’ என்ற பெயரிலான இரகசியத் திட்டத்தின் விபரங்கள் தவறுதலாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பகிரப்பட்டன.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையினால் அமெரிக்கா, கனடா மற்றும் கொஸ்டாரிகா ஆகிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்படவுள்ளனர்.
அமேசனின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி (Beth Galetti) இது குறித்துக் கூறுகையில் நிறுவனத்தின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற அதிகாரத்துவப் படிநிலைகளைக் குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் 14,000 பேர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்த 16,000 பேர் நீக்கப்படுகின்றனர். தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி (Andy Jassy) நிறுவன கலாசாரத்தில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.
ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகத்திற்கு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் தொலைபேசி கட்டண மீளளிப்பு போன்ற சிறிய செலவுகள் கூட தற்போது தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
Amazon Fresh மற்றும் Amazon Go போன்ற 70 பலசரக்கு அங்காடிகளை மூடவும் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. நாம் இதுவரை செய்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது, என ஆண்டி ஜாஸி ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களது பணிக்காலத்தின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை (Severance pay) வழங்கப்படவுள்ளது. அத்துடன், அவர்கள் நிறுவனத்திற்குள் காலியாக உள்ள மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 15 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட அமேசன் நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.