அங்குலானை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இளம் பெண் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிப் படுகொலை செய்த சந்தேக நபரைத் தேடிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹேஷலா காவிந்தி சில்வா என்ற இளம் யுவதியே இவ்வாறு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழும் ஒருவரே இக்கொலையைச் செய்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபர் தீவிர போதைப்பொருள் பாவனையாளர் என்பதுடன், உயிரிழந்த யுவதியையும் கடந்த எட்டு மாதங்களாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்துப் போதைப்பொருளுக்கு அடிமையாக்கியுள்ளார்.
போதைப்பொருள் பழக்கம் காரணமாக குறித்த யுவதியை அவரது பெற்றோர் மீண்டும் வீட்டிற்குச் சேர்த்துக்கொள்ள மறுத்துள்ளனர். சந்தேக நபர் தனது தாயார் மற்றும் சகோதரர் வசிக்கும் அங்குலானை ‘சயுர’ (Sayura) அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியிலேயே யுவதியைத் தங்க வைத்துள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி மாலை, சயுர அடுக்குமாடி குடியிருப்பின் ஜி (G) பிரிவின் எட்டாவது மாடியில் இருவருக்கும் இடையே கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர் யுவதியை மிகக் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் மதியம், யுவதி சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.
யுவதியின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் காணப்பட்டதோடு, தாக்குதலின் தீவிரத்தால் உடல் நீல நிறமாக மாறியிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது சடலம் களுபோவில போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அங்குலானை காவல்துறையினர் தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.