தற்போது நடைபெற்று வரும் இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் ஒரு பகுதியாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்காகப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக மைதானத்திற்குள் குடிநீர் போத்தல்கள், பவர் பேங்க், உணவுப் பொதிகள் மற்றும் கறுப்புக் கொடிகள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்படும். ஆனால், இந்த முறை முதல் முறையாக ‘விசில்’ கொண்டு செல்லவும் காவல்துறை மற்றும் விளையாட்டு நிர்வாகம் தடை விதித்துள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையத்தினால் ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது தற்செயலானது அல்ல என அக்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
விளையாட்டு மைதானம் என்பது மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கு விசிலுக்குத் தடை விதிப்பது மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அக்கட்சியின் பிரமுகர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இல்லாத இந்த நடைமுறை, தற்போது தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு அமலுக்கு வந்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரசிகர்களின் சத்தத்தினால் வீரர்களின் ஒருமுகத்தன்மை (Concentration) பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவுமே இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் தரப்புத் தெரிவிக்கிறது. இருப்பினும், சிஎஸ்கே (CSK) ரசிகர்களின் அடையாளமாக இருக்கும் விசிலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது விளையாட்டு ரசிகர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.