ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!
ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என அத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அஞ்சல் முகவரிகள் மூலம் அடையாள அட்டைகள் அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் பொதுப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை மற்றும் கடவுச்சீட்டு போன்ற அவசர தேவைகளுக்கு அடையாள அட்டையை பெற்றுக்கொள்பவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள info@drp.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.