பராசக்தி திரைப்படத்திற்குத் தடை கோரிக்கை: நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு இளைஞர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

tn youth congress demands ban on sivakarthikeyan s parasakthi claims film deliberately distorts history 1768300414975 16 9

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், 1960-களின் இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், காங்கிரஸ் கட்சியைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் வரலாற்று ரீதியாகப் பிழையானவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:

1965-இல் தபால் நிலையங்களில் இந்தியில் மட்டுமே படிவங்களை நிரப்ப வேண்டும் என காங்கிரஸ் அரசு கட்டாயப்படுத்தியதாகக் காட்டப்படும் காட்சி முற்றிலும் கட்டுக்கதை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை வில்லத்தனமாகச் சித்தரிக்கும் வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது சட்டப்படி தவறு என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1965 பெப்ரவரி 12 அன்று இந்திரா காந்தி கோவைக்கு வராத நிலையில், அவர் அங்கு வந்தது போன்றும், அவர் கண்முன்னே ரயில் எரிக்கப்படுவது போன்றும் கற்பனையான காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சியில் 200 தமிழர்களை காங்கிரஸ் அரசு சுட்டுக்கொன்றதாக ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி, காமராஜர், இந்திரா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் புகைப்படங்களைக் காட்டி அவமதித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் கொடியை எரிக்கும் காட்சிகள் படத்தில் திணிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரலாற்று உண்மைகளைத் திரித்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும், படக்குழுவினர் இதற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைச் செய்யத் தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

 

 

Exit mobile version